கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா மாநகர காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த பெண் மருத்துவர், பணியில் இருந்தபோது கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பல நகரங்களில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இதை அடுத்து ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையின் டீன் பொறுப்பில் இருந்த மருத்துவர் சந்தீப் கோஷ், பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்துக்கு தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்பதாகக் கூறி நேற்று (ஆகஸ்ட் 13) தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் புதிய டீன் ஆக நேற்று இரவு நியமிக்கப்பட்டார் சந்தீப் கோஷ்.
இந்நிலையில் சந்தீப் கோஷை தங்கள் மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக பொறுப்பேற்க அனுமதிக்கமாட்டோம் என்று இன்று காலை போராடினார்கள் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள்.
பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக இன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது டீன் சந்தீஷ் கோஷ் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது உயர் நீதிமன்றம்.
`அங்கு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் அவர்தான் (சந்தீப் கோஷ்) காப்பாளர். அவர் அனுதாபம் காட்டவில்லை என்றால் வேறு யார் காட்டுவார்கள். தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தவருக்கு 12 மணி நேரத்துக்குள் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் விடுப்பில் செல்ல வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தகுந்த உத்தரவை பிறப்பிப்போம்’ என்றது உயர் நீதிமன்ற அமர்வு.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்ற அமர்வு.