நாட்டின் முதன்மையான இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கே.எம். செரியன் (82) சனிக்கிழமை காலமானார்.
இந்தியாவில் முதன்முறையாக இதயமாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தவர் கே.எம். செரியன். மூளைச் சாவடைந்தவரிடமிருந்து இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்தார். குழந்தைகளுக்கான இதய அறுவைச் சிகிச்சையிலும் இவர் புகழ்பெற்றவர். நாட்டின் முதல் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்தவரும் செரியன்தான்.
சென்னையில் ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய செரியன், விஜயா மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, ஃபிரன்டியர் லைஃப்லைன் மருத்துவமனையை சென்னையில் நிறுவினார். டாக்டர் செரியன் இதய அறக்கட்டளை என்ற அமைப்பையும் செரியன் நிறுவனார்.
கேரள மாநிலம் காயங்குளத்தில் மார்ச் 8 1942-ல் பிறந்தார் செரியன். வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறைக்கான பயணத்தைத் தொடங்கினார்.
மருத்துவர் ஜான் கிர்க்லின் மற்றம் மருத்துவர் ஆல்பெர்ட் ஸ்டார் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் இணைந்துப் பயிற்சி பெற்றுள்ளார். முதன்முறையாக தனது 26-வது பிறந்தநாளில் ஆஸ்திரேலியாவில் முதல் இதய அறுவைச் சிகிச்சையைச் செய்தார் செரியன். இவருடைய ஆலோசகர்கள் முன்னிலையில் செய்து, அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் அறுவைச் சிகிச்சை நிபுணராக மூன்றாண்டு காலம் இருந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேஎம் செரியன் பெங்களூரு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நேற்றிரவு அவர் நிலைகுலைந்ததாகத் தெரிகிறது.
"கேஎம் செரியனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் இரவு 11.55-க்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று அவருடைய மகள் சந்தியா செரியன் கூறினார். இவருடைய மகன் சஞ்சய் செரியனும் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்தான்.
இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.