வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ராய் பரேலியில் 6.5 லட்சம் வாக்குகள் மற்றும் வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
இதன்பிறகு, வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தனக்குப் பதில் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என ராகுல் காந்தி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மஹாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பின்போது வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வயநாட்டுக்கு நவம்பர் 13-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வசம் உள்ள வயநாடு இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் வரைவுப் பட்டியலில் குஷ்புவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கட்சியின் மாநிலத் தலைமையிடம் பாஜக ஆலோசனை நடத்தவுள்ளது. மாநிலத் தலைமையிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
குஷ்பு தற்போது தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்தவராக உள்ளார். எம்டி ரமேஷ் ஷோபா சுரேந்திரன், கே சுரேந்திரன் மற்றும் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரது பெயர்களும் இந்தப் போட்டியில் உள்ளன.