
காங்கிரஸின் தோல்வியை மல்லிகார்ஜுன கார்கே சுவர்போல தாங்கிக்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் உரையாற்றினார்.
"தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த மகிழ்ச்சிக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து, மூன்றாவது முறையாகத் தோல்வியடைந்ததற்காக இந்த ஆனந்தமா?.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டிய ஒருவரை அணைபோல பாதுகாக்காமல் இருந்திருந்தால், மல்லிகார்ஜுன கார்கே கட்சிக்காக நிறைய சேவைகளைச் செய்திருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான பழியை சுவர்போல தாங்கிக்கொண்டார் கார்கே.
இதுபோன்ற சூழல் எப்போது நேர்ந்தாலும், ஒரு தலித்தை அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைப் பொறுப்பேற்கச் செய்து, காந்தி குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்துகொள்வார்கள். மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் இதே சூழல்தான் உருவானது. மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர்களுடையத் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. அப்போதும் அவர்கள் யாரை முன்வைத்தார்கள்? ஒரு தலித்தைதான் அவர்கள் முன்வைத்தார்கள். தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் அவர்கள் தலித்தை வேட்பாளராக நிறுத்தினார்கள்.
2022-ல் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சுஷில் குமார் ஷிண்டேவை வேட்பாளராக நிறுத்தினார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. தலித் தோற்றுக்கொள்ளட்டும் என்கிற மனப்பான்மை. 2017-ல் தோல்வி உறுதி என்ற நிலையிலும் அவர்கள் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்தினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே பட்டியலின/பழங்குடியின/இதர பிற்படுத்தப்பட்ட எதிர்ப்பு மனநிலை உள்ளது. இதனால்தான் இவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இழிவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள். இதே மனநிலையில் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரையும் இழிவுபடுத்துகிறார்கள்" என்றார் பிரதமர் மோடி.