கார்கே vs நிதிஷ் குமார் - இண்டியா கூட்டணிக்கு தலைவராகிறாரா கார்கே?

திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியைத் தவிர கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பு
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி (கோப்புப் படம்)
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி (கோப்புப் படம்)ANI
1 min read

தில்லியில் இன்று கூடிய இண்டியா கூட்டணியின் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் தொகுதிகளைப் பங்கீட்டுக் கொள்வது பற்றியும் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணிக்கும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியைத் தவிர கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் ஒன்றுபட்ட கூட்டணியில் இருப்பது, மாநில அளவில் தொகுதிப் பங்கீடுகள் செய்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. உ.பி. மாநிலத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்படவும், தொகுதிகளைப் பங்கீடு செய்து கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டிருந்தாலும் கூட்டணியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

தில்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்ந்து சிக்கலில் இருந்து வருகிறது. தில்லியில் 4 இடங்களிலும் பஞ்சாபில் 7 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறது. ஆனால், இடங்களை விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இல்லை. இதுதவிர கோவா, ஹரியானா, குஜராத் போன்ற இடங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிட விரும்புகிறது.

இண்டியா கூட்டணிக்கு யார் தலைமையேற்பது என்பதுதான் பிரதான கேள்வியாகப் பேசப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான கார்கே, கூட்டணிக்கும் தலைவராக நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. தலைமைப் பதவிக்கு கார்கே மற்றும் நிதிஷ் குமார் இடையே போட்டி ஏற்படும் சூழல் இருந்த நிலையில் ஒருவழியாக கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in