
அங்கன்வாடி பள்ளியில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும் என்ற மழலைக் குழந்தையின் கோரிக்கையை கருத்தில் எடுத்துக்கொள்வதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் மழலைக் குழந்தையின் காணொளி ஒன்று மிக அதிகளவில் பரவி வருகிறது. ஷங்கு என்ற மழலைக் குழந்தை காணொளியில் வைத்த கோரிக்கை தான் இந்தப் பெரும் வெளிச்சத்துக்குக் காரணம்.
தாயிடம் பேசிய அந்தக் குழந்தை, "அங்கன்வாடியில் எனக்கு உப்மாவுக்குப் பதில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும்" என்று கேட்கிறார். இந்தக் காணொளி ஜனவரி 30 முதல் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகத் தெரிகிறது. லட்சக்கணக்கானோர் இந்தக் காணொளியைக் கண்டு ரசித்துள்ளார்கள்.
கேரளம் முழுக்க இந்தக் குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர் பிரபலமாகிவிட்டார்கள். இவருடையப் பிரபலம் கேரள அரசையும் சென்றடைந்துவிட்டது.
ஷங்கு மழலைக் கோரிக்கைக்கு அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார். குழந்தையின் காணொளியை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அதே காணொளியில் "அங்கன்வாடி பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஷங்குவின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவருக்குப் பதிலளித்துள்ளார்.
மேலும் ஷங்கு, அவருடையத் தாயார் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வீணா ஜார்ஜ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.