
கேரள வனத்துறையில் ஏறத்தாழ எட்டு வருடங்களாகப் பணியாற்றி, 800-க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ள வன அதிகாரி ஜி.எஸ். ரோஷிணி, நேற்று (ஜூலை 6) திருவனந்தபுரம் மாவட்டம் பெப்பாரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து சுமார் 15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை, யாருடைய உதவியும் இல்லாமல் மீட்டுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ நாகத்தை ரோஷிணி மீட்கும் காணொளி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவரது துணிச்சலான முயற்சி பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
பெப்பாராவின் அஞ்சுமருதுமூடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடை அருகே, உள்ளூர்வாசிகள் பலர் குளிக்கச் செல்லும் இடத்தில் காணப்பட்ட ராஜ நாகத்தை மீட்பதற்காகச் சென்ற ஐந்து பேர் கொண்ட கேரள வனத்துறையின் விரைவு மீட்புக் குழுவில் ரோஷிணியும் ஒருவர்.
வனத்துறையைச் சேர்ந்த பிற அலுவலர்களும், பணியாளர்களும் அருகில் இருந்தாலும், தனி ஆளாக ஒரு கையில் நீண்ட குச்சியையும், மறு கையில் நீண்ட பையையும் ஏந்திய ரோஷிணி, ஆறு நிமிடங்கள் மட்டுமே செலவிட்டு 15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தைப் பிடித்தார்.
கேரள வனத்துறையின் விரைவு மீட்புக் குழுவில் கடந்த 2021-ல் இணைந்த ரோஷிணி, இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார். அறிவியல் பூர்வமான `பை மற்றும் குழாய்’ முறையைப் பயன்படுத்தி, அவர் பாம்புகளைப் பிடிப்பதாக ஆன்மனோரமா வெளியிட்ட செய்தியில் கூறப்படுகிறது.
பாம்புகள் மட்டுமல்லாமல் முள்ளம்பன்றிகள், மான்கள், காட்டுப் பூனைகள் போன்ற பல்வேறு வன விலங்குகளையும் அவர் மீட்டுள்ளார்.
இரவு நேரங்களில் மீட்புப் பணிக்குச் செல்லும் நேரங்களில் குழந்தைகளைக் கவனித்தும், சமையல் பணிகளில் ஈடுபட்டும் கணவர் சுஜித் குமார் தனக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பதாக ஆன்மனோரமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.