வயநாடு நிலச்சரிவு முதலாமாண்டு நினைவு அஞ்சலி: இடுகாட்டிற்கு புதிய பெயர்! | Wayanad Landslide

264 கல்லறைகள் அமைந்துள்ள இடுகாட்டில் பல்வேறு மதங்களின் கூட்டுப் பிரார்த்தனை இன்று நடந்தேறின.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் - கோப்புப்படம்
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் - கோப்புப்படம்ANI
1 min read

கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள சூரல்மலா-முண்டக்கை பகுதிகளில் கடந்தாண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட புதுமலையில் உள்ள இடுகாட்டிற்கு, பேரழிவின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (ஜூலை 30) `ஹ்ருதயபூமி’ (இதயப்பகுதி) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத உடல் பாகங்கள் மத வேறுபாடு இல்லாமல் அருகருகே புதைக்கப்பட்டு 264 கல்லறைகள் அமைந்துள்ள இடுகாட்டில், முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு மதங்களின் கூட்டுப் பிரார்த்தனை இன்று (ஜூலை 30) நடந்தேறின.

நிலச்சரிவின் தாக்கத்தை தாங்கிய சமூகத்தின் துக்கம் மற்றும் ஒற்றுமைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு `ஹ்ருதயபூமி’ என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட 264 உடல்களில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் சுமார் 130 நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மத நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அந்த இடத்தை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஒரே இடத்தில் அருகருகே வாழ்ந்து இறந்தவர்களை பிரிப்பதைவிட, அவர்கள் ஒன்றாக ஓய்வெடுக்கவேண்டும் என்று பல குடும்பங்கள் நினைத்ததே இதற்குக் காரணமாக இருந்தது.

ஆரம்பத்தில், டி.என்.ஏ. மாதிரிகளைச் சேகரித்த பிறகு, கல்பெட்டா மைலாடி பாரா பொது தகனக்கூடத்தில் அடையாளம் தெரியாத இரு உடல்களை அதிகாரிகள் தகனம் செய்தனர். இருப்பினும், சட்டத் தடைகள் காரணமாக, புதுமலையில் உள்ள ஹாரிசனின் மலையாளத் தோட்டத்திலிருந்து 65 சென்ட் நிலத்தை மாவட்ட ஆட்சியர் அடையாளம் கண்டு கையகப்படுத்தினார். மீதமுள்ள உடல்களும், உடல் பாகங்களும் அங்கு தகனம் செய்யப்பட்டன.

குறிப்பாக, ஒவ்வொரு கல்லறையும் தனித்தனியாக எண்ணப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக குறிக்கப்பட்டன. வெவ்வேறு கல்லறைகளில் காணப்பட்ட பாகங்கள் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை டி.என்.ஏ. பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்திய பின்னர், எச்சங்கள் ஒரே கல்லறையில் சேர்க்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in