‘தி கேரளா ஸ்டோரி’ டிடி-யில் ஒளிபரப்பு: பினராயி விஜயன் எதிர்ப்பு

“வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது”.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்@pinarayivijayan

டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 5-ல் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

தமிழ்நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து இப்படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

மேலும் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் காவல் துறை பாதுகாப்புடன் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

“அரசு தொலைக்காட்சிகள் பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது. மக்களவை தேர்தல் வரும் நிலையில் வகுப்புவாத பதற்றம் ஏற்படுத்த முயலும் படத்தை ஒளிபரப்பும் முடிவை திரும்ப பெற வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளம் ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in