
கடந்த வாரம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பாததற்கு பாதிரியார்களை கேரள அமைச்சர் சஜி செரியன் விமர்சித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியிலுள்ள அவரது இல்லத்தில் பாதிரியார்களை அழைத்து கலந்துரையாடினார். அப்போது சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்துவ சமூகத்தினரின் பங்கு குறித்து உரையாடினார்.
இதனிடையே, கேரளம் மாநிலம் ஆலப்புழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் அந்த மாநில அமைச்சர் சஜி செரியன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
"பாஜகவிடமிருந்து அழைப்பு வந்தால் சில பாதிரியார்கள் பூரிப்படைகிறார்கள். பிரதமரைச் சந்திக்கச் செல்பவர்களிடம், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுவதற்கான நேர்மை இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லாமல் இருக்கிறது. மணிப்பூரில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படும் விவகாரத்தில் தலையிடச் சொல்லி பிரதமரிடம் எவரேனும் கேட்டார்களா?. சங் பரிவார் அமைப்புகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே கேரளத்திலுள்ள சிலர் பாஜகவை ஆதரிக்கிறார்கள்" என்றார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் வன்முறை தொடங்கியதிலிருந்து இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.