கேரளத்தின் மலப்புரத்தில் 38 வயதுடைய நபருக்குக் குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.
13 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று (எம்பாக்ஸ்) மிக வேகமாகப் பரவியதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 14-ல் குரங்கு அம்மை தொற்று பரவல் குறித்த உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது உலகச் சுகாதார மையம். இதை அடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நபர்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது மத்திய அரசு.
இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று ஒருவருக்கு இருப்பதுக் கடந்த செப். 9 அன்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை 2022 முதல் இந்தியாவில் 30 பேருக்கும் மேல் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், துபாயிலிருந்து கேரளத்துக்கு வந்த 38 வயது நபருக்குக் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிளாட் 2 வகை குரங்கு அம்மை பாதிப்பு என்பதால் அதன் தாக்கம் சிறிய அளவிலேயே இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் 1 வகையைச் சேர்ந்த எம்பாக்ஸ் வைரஸை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அவசர நிலையாக அறிவித்தது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்துக் கூறியதாவது:
கேரளத்தில் ஒருவருக்குக் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்ததன் காரணமாக மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கேரள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்று பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
குரங்கு அம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பியது. அதில், குரங்கு அம்மை பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறிகுறியாக தோலில் அரிப்பு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படும். 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களைப் பெரும்பாலும் குரங்கு அம்மை தாக்குகிறது. ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு ஏற்படுவதால் குரங்கு அம்மை பரவும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கு அம்மை எளிதாகத் தாக்குகிறது. ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டம் மூலம் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரங்கு அம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.