
மழலையின் குரலுக்கு செவிசாய்த்து கேரள அங்கன்வாடியில் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளத்தில் கடந்த ஜனவரி மாதம் மழலைக் குழந்தையின் காணொளி ஒன்று இணையத்தைக் கலக்கியது. காணொளியில் தாயிடம் பேசிய அந்த மழலைக் குழந்தை, "அங்கன்வாடியில் எனக்கு உப்மாவுக்குப் பதில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும்" என்று கேட்கிறார். இந்தக் குழந்தையின் பெயர் ஷங்கு.
ஜனவரி 30 முதல் இணையத்தைக் கலக்கி வந்த இக்காணொளி அம்மாநில மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜை சென்றடைந்தது. குழந்தையின் காணொளியை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அவர், "அங்கன்வாடி பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஷங்குவின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது" என்று வீணா ஜார்ஜ் பதிலளித்தார்.
இந்நிலையில், ஷங்குவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கன்வாடி உணவுப் பட்டியலில் முட்டை பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான அங்கன்வாடி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், "ஷங்கு பேசிய காணொளி இணையத்தில் வைரலான பிறகு, அவருடைய அங்கன்வாடி மற்றும் இதர பல அங்கன்வாடிகளில் பிரியாணி வழங்கப்பட்டது. இதை எப்படி செயல்படுத்தலாம் என்று பார்த்தபோது, அங்கன்வாடியில் முட்டை கொடுக்கப்படுகிறது. இதை வாரத்துக்கு இரு நாள்களிலிருந்து மூன்று நாள்களாக மாற்றினோம். முட்டை பிரியாணியையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
அங்கன்வாடியில் புதுப்பிக்கப்பட்ட உணவுப் பட்டியலில் ஊட்டச்சத்து நிறைந்த லட்டு, பருப்புப் பாயாசம், ராகி அடை, தாளிச்ச சோயா, கோதுமை புலாவு, முட்டை பிரியாணி இணைக்கப்பட்டுள்ளன.