
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் இன்று (ஜூலை 21) காலமானார்.
2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றிய வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன் எனப்படும் வி.எஸ். அச்சுதானந்தன், பல தசாப்தங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
கடந்த 1923-ல் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆழப்புழாவில் பிறந்த அச்சுதானந்தன், 1939-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதீத ஈடுபாடு காட்டிய வி.எஸ். 1940-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தென்னை நார் தொழிலாளர்கள், கள் இறக்கும் பணியில் ஈடுபவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
குறிப்பாக, இந்தியாவுடன் இணையாமல் திருவாங்கூர் சமஸ்தானத்தை தனி நாடாக்க திவான் சி.பி. ராமசாமி ஐயர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து 1946-ல் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட புன்னப்ரா-வயலார் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் வி.எஸ். முக்கியப் பங்காற்றினார்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருந்த வி.எஸ்., 1964-ல் அக்கட்சியின் தேசியக் குழுவில் இருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி 32 பேரில் ஒருவராக இருந்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் மாநிலத் தலைவர், மத்திய பொலிட் பீரோ உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்தார்.
கேரள சட்டப்பேரவைக்கு 1967, 1970, 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் முதல்வராகவும், ஏறத்தாழ 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் அச்சுதானந்தன் பணியாற்றியுள்ளார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தாலும், கேரள முதல்வர் பதவிக்கு அச்சுதானந்தனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, பினராயி விஜயன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வி.எஸ். கடந்த சில ஆண்டுகளாக படுக்கையில் இருந்தபடி அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 101-வது வயதில் இன்று (ஜூலை 21) அவர் காலமானார்.