
மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் பணம் போட்டுள்ளவர்கள் பணத்தை எடுக்க 6 மாதங்களுக்குத் தடை விதித்து ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது. மேலும், வங்கி மூலம் புதிய கடன்கள் எதுவும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. வங்கியின் மோசமான நிலை குறித்து அறிய வந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. இதன்மூலம், தி நியூ இந்தியா கூட்டுறவு வங்கி செய்திகளில் பிரபலமானது. இதைத் தொடர்ந்து, பணம் போட்டுள்ளவர்கள் பிப்ரவரி 27 முதல் ரூ. 25 ஆயிரம் வரை பணம் எடுக்கும் வகையில் சற்று நிவாரணம் வழங்கி மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரள காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் தி நியூ இந்தியா கூட்டுறவு வங்கி குறித்து பதிவிட்டதன் மூலம் இவ்விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள காங்கிரஸ் சார்பில் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"பிரீத்தி ஜிந்தா தனது சமூக ஊடகக் கணக்குகளை பாஜக வசம் ஒப்படைத்து, ரூ. 18 கோடி கடன் தள்ளுபடியைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் அந்த வங்கி திவாலாகியுள்ளது. வங்கியில் பணத்தைப் போட்டவர்கள் தெருவில் நிற்கிறார்கள்" என்று பதிவிட்டிருந்தது.
கேரள காங்கிரஸின் இந்தப் பதிவைப் பகிர்ந்து பிரீத்தி ஜிந்தா பதிலளித்துள்ளார்.
"என்னுடைய சமூக ஊடகக் கணக்குகளை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். இப்படி போலிச் செய்திகள் பரப்பப்படுவதை எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன். யாரும் எனக்காக எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஓர் அரசியல் கட்சி அல்லது அதன் பிரதிநிதிகள் கவனம் பெறுவதற்காக என் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதை, அற்பமாக வதந்திகளைப் பரப்புவதை, போலிச் செய்திகளைப் பரப்புவதை எண்ணி அதிரச்சியாக உள்ளது.
நான் பெற்ற கடன் 10 ஆண்டுகளுக்கு முன்பே முழுவதுமாகத் திருப்பி அடைக்கப்பட்டது. தெளிவுபடுத்த வேண்டும், எதிர்காலத்தில் தவறானப் புரிதல்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பதிவு செய்கிறேன்" என்று பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அடுத்த பதிவில், "நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன. சமூக ஊடகங்கள் மற்றும் எக்ஸ் தளப் பக்கத்துக்கு நன்றி. என் வாழ்க்கையில் மரியாதைக்குரிய ஊடகவியலாளர்கள் பலர் நிறைய செய்திகளை முற்றிலுமாகத் தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற மரியாதைகூட அவர்களிடத்தில் இருக்காது. நானும் நீதிமன்றங்களின் படியேறி, நிறைய பணம் செலவழித்து வழக்குகளைத் தொடுத்துள்ளேன். அந்த வழக்குகள் நடந்துகொண்டே இருக்கும்.
வரும் காலங்களில் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்குப் பொறுப்பேற்க வைக்கும் விதமாக ஊடகவியலாளர்களை இங்கேயே பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. செய்திகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தாமல், செய்திகளின் தொடர்ச்சிகளைப் பின்தொடராமல் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களின் பெயர்களை நிச்சயமாக நான் பட்டியலிடப் போகிறேன்.
எனக்கென்று இருக்கும் அந்தஸ்துக்கு நீங்கள் மதிப்பு கொடுக்காவிட்டால், உங்களுடைய அந்தஸ்துக்கும் நான் மதிப்பு கொடுக்கப்போவதில்லை சுசேதா தலால், மன்னிக்கவும்.
அடுத்த முறை என் பெயரைக் குறிப்பிடுவதற்கு முன்பு என்னை அழைத்து, இந்தச் செய்தி உண்மைதானா என்பதைக் கண்டறியுங்கள். உங்களைப்போலவே நானும் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்துதான் இப்படியொரு அந்தஸ்தைக் கட்டமைத்துள்ளேன். என்னுடைய அந்தஸ்தைப் பற்றி நீங்கள் கவலைபடப்போவதில்லையெனில், நானும் உங்களுடைய அந்தஸ்தைப் பற்றி கவலைப்படப்போவதில்லை" என்று பிரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார்.
பிரீத்தி ஜிந்தாவின் பதிவுக்கு கேரள காங்கிரஸ் பிரிவு பதிலளித்துள்ளது.
"மற்ற பிரபலங்களை தங்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை ஐடி பிரிவினரிடம் தாரை வார்ப்பதைப்போல் அல்லாமல், உங்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை நீங்களே நிர்வகிப்பது மகிழ்ச்சி. கடன் குறித்த உங்கள் தரப்பு விளக்கத்துக்கு நன்றி. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறோம். ஊடகங்களில் வெளியான செய்திகளையே நாங்கள் பகிர்ந்திருந்தோம்.
பணம் போட்டு தங்களுடைய சேமிப்புகளை இழந்தவர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு எனில், அதை வெளிப்படையாக ஆதாரங்களுடன் மறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் பணம் போட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கேரள காங்கிரஸ் பிரிவு பதிலளித்துள்ளது.