தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து மௌனம் காக்கும் காங்கிரஸ்: பினராயி விஜயன்

கேரளத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆலப்புழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

"ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ பாஜக அரசு ஒரேநாளில் ரத்து செய்தது. எவ்வித நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டப்பிரிவானது நீக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் நாடாளுமன்றத்திலும் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.

நாங்கள் எங்களுடைய நிலைப்பட்டிலும், கொள்கைகளிலும் நிலைத்தன்மையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியைப்போல வாக்குக்காக எவ்வித சமரசத்தையும் செய்யவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இதுதொடர்பாக எந்த அம்சமும் இடம்பெறவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்குறுதியளித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இதற்கான அம்சங்களும் எதுவும் இடம்பெறவில்லை" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் எதிர் துருவங்களாக உள்ளன.

கேரளத்திலுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in