
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி தேர்தல் ஆணையத்தால் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் சிறப்பு தீவிர திருத்தத்தால் நீக்கப்பட்டன. இதில் ஆட்சேபனை இருந்தால், அதைத் தெரிவிக்க செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலை வெளிப்படைத்தன்மையுடன் புதுப்பிக்க வேண்டும் என இத்தீர்மானம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொள்வது அறிவியல்பூர்வமானது அல்ல என்றும் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் விமர்சிக்கிறது. இதன்மூலம், 1987-க்குப் பிறகு பிறந்த வாக்காளர்கள் தங்களுடைய பெற்றோரின் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்றும் 2003-க்குப் பிறகு பிறந்தவர்களும் இதே சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பது தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 326-ன் கீழ் சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஹாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்தத்தின் அரசியலமைப்பு அங்கீகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்க, இதே நடைமுறையை தேர்தல் வரவுள்ள கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் அவசரமாக செயல்படுத்துவதை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Special Intensive Revision | Kerala Assembly |