
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கடைசியாக கடந்த பிப்ரவரி 2020-ல் தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவு பெற உள்ளதை அடுத்து, அதற்கு முன்பாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முன்னணித் தலைவர்கள் பலர், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெஜ்சிவால் `தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இன்றி சந்திக்கப்போகிறது’ என்றார்.
கடைசியாக நடந்த மக்களவை தேர்தலில், தில்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும், 3-ல் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் இந்த 7 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியது பாஜக.
அதேநேரம் தில்லியில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், பஞ்சாபில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டது ஆம் ஆத்மி. அதற்குப் பின்பு நடந்த ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றது ஆம் ஆத்மி.
வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டிருந்தது. கெஜ்ரிவாலின் இந்த புதிய அறிவிப்பு இண்டியா கூட்டணிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.