
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசியப் பூங்கா, அதிக பட்டாம்பூச்சி இனங்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பன்முகத்தன்மையான தேசியப்பூங்காவாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக பட்டாம்பூச்சி பாதுகாப்புக் கூடுகை, கடந்த செப்.27 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் இந்திய முழுவதிலும் இருந்து 40 முக்கிய பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அஸ்ஸாமைச் சேர்ந்த முனைவர் ஜோதி கோகாய் காஸிரங்கா பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி இனங்கள் குறித்த தன் ஆய்வுப் புத்தகத்தை வெளியிட்டார்.
இதன்படி, காஸிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் சுமார் 446 பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தின் நம்தாபா தேசியப் பூங்காவை அடுத்து, இந்தியாவில் அதிக பட்டாம்பூச்சி இனங்களைக் கொண்ட இரண்டாவது பன்முகத்தன்மையான தேசியப்பூங்காவாக காஸிரங்கா உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
காஸிரங்கா தேசியப் பூங்கா பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி இனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து இந்த பட்டாம்பூச்சி பாதுகாப்புக் கூடுகையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகரந்தச் சேர்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பட்டாம்பூச்சியினங்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அத்தியாவசியமானதாகும்.
வங்கப் புலி, இந்திய காண்டாமிருகம், ஆசிய யானை, சதுப்பு நில மான், காட்டெருமை என காஸிரங்காவில் காணப்படும் 5 முக்கிய வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் ஆறாவதாக பட்டாம்பூச்சிகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது இந்தக் கூடுகையில் கலந்துகொண்ட பட்டாம்பூச்சி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.