முதல்வர்களுக்கு கருணாநிதி பெற்றுத் தந்த உரிமை!

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர் தேசியக்கொடி ஏற்றும்போது முதல்வர் தேசியக்கொடி ஏற்றுவதில் என்ன தவறு என்று நினைத்தார் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி
முதல்வர்களுக்கு கருணாநிதி பெற்றுத் தந்த உரிமை!
1 min read

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார்கள். ஆனால் சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 1974-ல் முதன்முதலில் பெற்றுக் கொடுத்தவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆவார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தலைநகர் தில்லியில் தேசியக்கொடி ஏற்றும் உரிமை இந்திய பிரதமருக்கு இருந்தது. இதன்படி 1947 முதல் 1964 வரை தொடர்ச்சியாக 17 சுதந்திர தினங்களில் தேசியக்கொடியை ஏற்றினார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

இந்திய அரசியலைப்புச் சட்டம் 26 நவம்பர் 1949-ல் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசியலைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950-ல் அமலுக்கு வந்து இந்தியா குடியரசானது. எனவே அரசியலைப்புச் சட்டம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ஐ குடியரசு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது அன்றைய மத்திய அரசு.

இதைத் தொடர்ந்து முதல் குடியரசு தினமான 26 ஜனவரி 1950-ல் அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தேசியக்கொடி ஏற்றினார். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி வருகிறார்கள் குடியரசுத் தலைவர்கள்.

மத்தியில் நிலைமை இப்படி இருக்க, இந்திய மாநிலங்களில் நிலைமை வேறு விதமாக இருந்தது. சுதந்திரம் பெற்ற காலம் முதல், சுதந்திர தினம், குடியரசு தினம் என இரண்டு முக்கிய நாட்களிலும் சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடி ஏற்றுவது நடைமுறையாக இருந்தது.

மாநில முதல்வர்களுக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமை குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர் தேசியக்கொடி ஏற்றும்போது மாநில முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில் என்ன தவறு என்று நினைத்தார் அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

இதை அடுத்து 1974 பிப்ரவரியில், ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தில் மாநிலங்களில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு அளிக்கக்கோரி அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை ஜூலை 1974-ல் அளித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து 15 ஆகஸ்ட் 1974-ல் முதல் முறையாக தேசியக் கொடியை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் ஏற்றினார் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி.

5 முறை தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த கருணாநிதி மொத்தம் 14 முறை தேசியக்கொடி ஏற்றியுள்ளார். இந்த 2024-ம் ஆண்டு, மாநில முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கான உரிமையைப் பெற்ற பொன்விழா ஆண்டாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in