ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

முன்னதாக, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்
1 min read

பெண் கடத்தல் வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா இதுவரை விசாரணைக் குழு முன் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக தேவெகௌடாவின் மகன் ஹெச்.டி. ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவரும் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். ஆனால், இவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ரேவண்ணா கடந்த 4-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் கர்நாடக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ரேவண்ணா இன்று கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை மே 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கைது நடவடிக்கை குறித்து கடந்த 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறிய ரேவண்ணா, "எனக்கு எதிராக அரசியல் சதி நடந்து வருகிறது. எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது மாதிரியான நிகழ்வுகள் எதையும் நான் பார்த்ததே கிடையாது" என்றார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி கூறுகையில், "அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஹெச்.டி. ரேவண்ணா பெயரைக் கெடுக்க அரசு நினைக்கிறது" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in