
பெங்களூரு கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், சின்னசாமி மைதானத்தின் வெளியே கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் உள்பட காவல் உயர் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தவர்கள் சம்பவத்தில் ஆர்சிபி அணி, நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்சிபி அணியின் மார்கெடிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகியோர் கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட், செயலர் ஏ ஷங்கர், பொருளாளர் ஈஎஸ் ஜெயராம் ஆகியோர் கூட்டாக ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்கள். இதை அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரியிருந்தார்கள்.
வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்ஆர் கிருஷ்ண குமார், தற்போதைக்கு இவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளார். அதேசமயம், மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் மற்றும் நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் நீதிமன்றத்தின் வரம்புக்குள்பட்ட இடத்தைத் தாண்டி வெளியே எங்கும் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.