
கர்நாடகத்தில் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்கும் மாதவிடாய் விடுப்புக் கொள்கை-2025-க்கு அம்மாநில அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அரசு மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அமல்படுத்தவுள்ளது கர்நாடகம்.
இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க, நாடு தழுவிய பிரத்யேகக் கொள்கை முடிவு என்று எதுவும் கிடையாது. மாநில அரசுகள் மாநிலங்களுக்குட்பட்டு கொள்கை முடிவுகளை எடுத்து வருகின்றன. ஒடிஷா மற்றும் பிஹாரில் அரசுப் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. அங்கு ஆண்டுக்கு 12 நாள் விடுப்பு வழங்கப்படுகிறது.
கேரளத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டும் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் பெண்கள் பணிபுரியும் எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அம்மாநில தொழிலாளர் துறை பரிந்துரைத்தது. வியாழக்கிழமை கூடிய கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2024-ல் ஆண்டுக்கு 6 நாள்கள் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு முன்மொழிந்திருந்தது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்குப் போதிய ஆய்வு முடிவுகள் இருப்பதாக கர்நாடக தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்தோஷ் லேட் தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டம் மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சமூகத்தல் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அது ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
Menstrual Leave | Women | Karnataka Cabinet |