
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 308 ஆக உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியைத் தொடர்ந்து, கேரள அரசுக்கு இருக்கும் அடுத்த சவால், இந்தப் பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வது. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முன்வருமாறு பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இதுதொடர்பாக வாக்குறுதியளித்திருக்கிறார். ஒன்றிணைந்து மறுகட்டமைப்பு செய்வோம், நம்பிக்கையை மீட்டெடுப்போம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியமான ரூ. 50 ஆயிரத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்கள். முதல்வர் பினராயி விஜயன் ரூ. 1 லட்சமும், அவருடைய மனைவி டிகே கமலா ரூ. 33 ஆயிரமும் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்வி கோவிந்தன் கூறுகையில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றார். தமிழ்நாடு மற்றும் திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்வி கோவிந்தன் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாகக் கூறியுள்ளார்.