வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட உத்தரவு

ஜிடி வணிக வளாக உரிமையாளர் மற்றும் விவசாயியை உள்ளே அனுமதிக்காத பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட உத்தரவு
படம்: https://x.com/gtworldmall
1 min read

பெங்களூருவில் வேட்டி கட்டிய விவசாயியை உள்ளே அனுமதிக்காத ஜிடி வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் வேட்டி கட்டிய மூத்த விவசாயி ஃபகீரப்பா என்பவர் படம் பார்ப்பதற்காக தனது மகனுடன் ஜிடி வணிக வளாகத்துக்குச் சென்றிருக்கிறார். இவரை உள்ளே அனுமதிக்க மறுத்த பாதுகாப்பு ஊழியர்கள், பேண்ட் (Pant) அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதுதொடர்பாக, அந்த விவசாயி கூறுகையில், "நான் வேட்டி அணிந்திருப்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். பேண்ட் அணிந்து வருமாறு கூறுகிறார்கள். நாங்கள் தொலைவிலிருந்து வந்துள்ளோம். கிராமத்திலிருந்து வந்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இருந்தபோதிலும், அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை" என்றார்.

இவருடைய மகன் நாகராஜ் கூறுகையில், "ஜிடி வணிக வளாகத்துக்குப் படம் பார்க்க வந்தோம். மாலை 6 மணியளவில் நாங்கள் வந்தோம். ஆனால், என் தந்தை வேட்டி அணிந்திருப்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுப்பதாக பாதுகாவலர்கள் தெரிவித்தார்கள். தாங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என பாதுகாவலர்கள் தெரிவித்தார்கள். மேலும், உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்கள். நிறைய முறை கோரிக்கை வைத்தபோதிலும், அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்றார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவியது. இதன் எதிரொலியாக, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் பலர், இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேட்டி அணிந்து நேற்று ஜிடி வணிக வளாகத்துக்குச் சென்றார்கள்.

இதைத் தொடர்ந்து, வணிக வளாகத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் விவசாயி ஃபகீரப்பாவின் மன்னிப்புக் கேட்டார்கள். இவரை உள்ளே அனுமதிக்காத பாதுகாவலரும் மன்னிப்புக் கோரினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபகீரப்பா, "நான் 5 குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளேன். அவர்கள் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள். இதற்காக என்னுடையக் கலாசாரத்தை, ஆடை முறையை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. வணிக வளாகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக என்னால் பேண்ட் அணிய முடியாது. நம்முடைய கலாசாரத்தைக் குறைத்து மதிப்பிடுவது வேதனையளிக்கிறது" என்றார்.

இந்த நிலையில், விவசாயியை உள்ளே அனுமதிக்காத ஜிடி வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜிடி வணிக வளாக உரிமையாளர் மற்றும் விவசாயியை உள்ளே அனுமதிக்காத பாதுகாவலர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in