

கர்நாடகத்தில் 10-ம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களை அரசு சார்பில் லண்டனுக்குக் கல்விச் சுற்றுலா அனுப்பி உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமய்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் முதல்முறையாக அரசின் சார்பில், 10-ம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 4 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக லண்டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா உறைவிடக் கல்வி நிலையங்களின் சங்கம் (கே.ஆர்.இ.ஐ.எஸ்.) என்ற முன்னெடுப்பு மூலம், உறைவிடப் பள்ளிகளின் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற கீர்த்தனா, கிரண் குமார், சவிதா மகாதேவப்பா தப்பல், அஸ்வினி ஹனுமந்தப்பா லமனி ஆகிய 4 மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் கிட்டூர் ராணி சென்னம்மா உறைவிடப் பள்ளியின் முதல்வர் ரூபா மற்றும் அம்பேத்கர் வளர்சிக் கழக சார்பில் தாலுகா அலுவலர் நாகராஜ் புஜார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா, தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கே.ஆர்.இ.ஐ.எஸ். பள்ளிகளில் இருந்து சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுதோறும் இனி லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இந்த 7 நாள் கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள், லண்டன் பொருளாதாரக் கல்லூரி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அம்பேக்தர் அருங்காட்சியகம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய கல்வி நிலையங்களைப் பார்வையிடுவார்கள் என்றும், மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை அறிமுகப்படுத்துவது மூலம் அவர்களது கல்வி இலக்குகள் உயர அரசு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் லண்டன் சென்றுள்ள செய்தியைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அம்மாநில முதல்வர் சித்தராமய்யா,
”முன்னோடியான இந்தத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களின் லட்சியத்தை உயர்த்தும். அம்பேத்கரின் உலகளாவிய பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் நம் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும். இனி ஆண்டுதோறும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்குவிக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.