
கடந்த இரண்டு தசாப்தங்களாக கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) கர்நாடக அரசு அமைத்துள்ளது.
1995 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியபோது, கொலை செய்யப்பட்ட பலரது உடல்களை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஒரு நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
இதை மேற்கோள்காட்டி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் சாட்சியம் அளித்த நபரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், புதைக்கப்பட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் என்று அவர் கூறியதாகவும் இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பி.என்.எஸ். பிரிவு 211(அ)-ன் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக தர்மஸ்தலா காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறை டிஜிபி மொஹாந்தி தலைமையில் மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்த வழக்கு மற்றும் மாநிலம் முழுவதும் இது தொடர்புடைய குற்ற வழக்குகளை விசாரிக்கும் பணியில் சிறப்பு விசாரணைக் குழு ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே ஊடகத்தால் அணுகப்பட்ட புகாரில், 1995 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நூற்றுக்கணக்கான உடல்களை - பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்களை புதைக்க மற்றும் எரிக்க தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் துப்புரவுத் தொழிலாளி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு தன்னை உட்படுத்த அவர் தயாராக இருப்பதாகவும், சீல் வைக்கப்பட்ட தனது புகாரின் வாக்குமூல ஆவணத்திற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி. தனஞ்செயை அவர் பாதுகாவலராக நியமித்துள்ளதாகவும், அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.