கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பு முறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சட்டப்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மைசூரில், அரசாங்க வளர்ச்சிப் பணிகளால் நிலங்களை இழந்த பொதுமக்களுக்கு வேறு இடங்களில் மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பால் நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் வளர்ச்சிப் பணிகளால் நிலத்தை இழந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, அதற்குப் பதில் மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பால் அதிக மதிப்பிலான 14 பிளாட்கள் ஒதுக்கப்பட்டன என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணா என்பவரால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 9 நபர்கள் மீது ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. கர்நாடக எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் சித்தராமையா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டப் பிரிவு 218, ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக, சித்தராமையா மீது புகார் வழங்கிய சினேஹமாயி கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு சங்கர்.
இது தொடர்பாக முன்பு பேட்டியளித்த முதல்வர் சித்தராமையா, `மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பு விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டுள்ளன. மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பால் எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக வேறு நிலம் வழங்க 2014-ல் நான் முதல்வராக இருந்தபோது என் மனைவி விண்ணப்பித்தார். அந்த விவகாரத்தில் நான் எந்த விதத்திலும் தலையிடவில்லை. இதை அடுத்து 2021-ல் பாஜக ஆட்சியின்போதுதான் என் மனைவிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது’ என்றார்.