
அரசின் அனுமதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் உத்தரவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கவலை தெரிவித்து வந்தது. அரசுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தடை கோரி கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரியங்க் கார்கே மற்றும் அவருடைய குடும்பத்துக்கு மிரட்டல்களும் வந்தன. இதன் காரணமாக இந்தப் பிரச்னை மாநிலம் முழுக்க பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுக்க அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசின் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கும் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பிரியங்க் கார்கே கூறியதாவது:
"பொது இடங்கள், அரசுப் பள்ளிகள், அரசு வளாகங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் தொடர்பாக ஒரு சட்டத்தைக் கொண்டு வர விரும்புகிறோம். உள்துறை, சட்டத் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைத் தொகுத்து புதிய சட்டத்தை வகுக்கவுள்ளோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டு புதிய சட்டம் நடைமுறைக்கு வரும். பொது இடங்களிலும் சாலைகளிலும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்துவிட முடியாது. எதைச் செய்ய நினைத்தாலும், அதற்கு அரசின் அனுமதியைப் பெற்ற பிறகு தான் செய்ய வேண்டும். அனுமதியை வழங்குவதற்கென்று சில அளவுகோல்கள் உள்ளன. அதிகாரிகளிடம் வெறுமன தகவலைத் தெரிவித்துவிட்டு சாலைகளில் தடியுடன் பேரணியை மேற்கொள்ள முடியாது. நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ள சட்டத்தில் இவையனைத்தும் அங்கம் வகிக்கும்" என்றார் பிரியங்க் கார்கே.
RSS | Karnataka Cabinet | Priyank Kharge |