

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பில் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதி பங்கேற்காதது தவறு என்று அம்மாநில முதல்வர் சித்தராமய்யா கண்டித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல் காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. கர்நாடக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, கணக்கெடுப்பாளர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், வீடுகள்தோறும் கணக்கெடுத்து வருகின்றனர்.
அதன்படி பெங்களூருவில் வசித்து வரும் பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தியின் இல்லத்திற்கும் கணக்கெடுக்கச் சென்றனர். அப்போது, நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்து, தங்களது குடும்பத்தை பற்றிய தகவல்களையும், தங்களது சாதி மற்றும் பிற விவரங்களையும் கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் எங்கள் குடும்பம் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்காது என்பதை இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்கிறோம் என்று எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமய்யா,
“தவறான புரிதலின் அடிப்படையிலேயே நாராயண மூர்த்தி தம்பதி இதுபோல் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் செய்தது தவறு. மத்திய அரசு இதே போன்ற கணக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பார்களா? விரைவில் மத்திய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். கர்நாடக மாநிலம் 7 கோடி மக்கள் தொகை கொண்டதாகும். அதன் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகங்கள் குறித்த கணக்கெடுப்பு இது” என்றார்.