
கர்நாடகத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளருக்கு அம்மாநில முதல்வர் சித்தராமய்யா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கர்நாடகத்தில் கடந்த ஞாயிறு அன்று சில பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக சில பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன மார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே முதல்வர் சித்தராமய்யாவுக்குக் கடிதம் எழுதினார்.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் சித்தராமய்யா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசுக்கு சொந்தமான இடங்களைப் பயன்படுத்துகின்றன. அதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் எந்தெந்த இடங்களில் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் தடை நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும்” என்றார்.