காங். மேலிடம் சொன்னால் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் ஆகலாம்: சித்தராமையா | Siddaramaiah |

காங்கிரஸ் உயர் மட்டக் குழு அழைத்தால் தில்லிக்குச் சென்று ஆலோசனை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சந்திப்புANI
2 min read

காங்கிரஸ் உயர்மட்ட குழு சொன்னால் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் ஆகலாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கடந்த 2023-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. கர்நாடக காங்கிரஸின் இரண்டு முக்கிய தலைவர்களாக சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் உள்ளார்கள். இவர்களுக்கு இடையே, முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக சித்தராமையா இருப்பதாகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமார் பொறுப்பேற்கலாம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்றார். இதற்கிடையில் சித்தராமையா முதலமைச்சர் ஆகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் கோரி காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

இக்கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் மேலிடத்தில் சிவகுமார் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இந்தப் பிரச்னையை இரு தலைவர்களும் நேரில் சந்தித்து முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, நவம்பர் 29 அன்று காலை இருவரும் நேரில் சந்தித்து, ஒன்றாக காலை உணவு அருந்தினார்கள். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து ஒற்றுமையாக இருப்பதாகக் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் இருவரும் நேரில் சந்தித்து, இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது சித்தராமையா கூறியதாவது:-

“இன்று, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் காலை உணவருந்தினேன். அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து விவாதித்தோம். மேலும் விவசாயிகள் பிரச்னை உட்பட மாநிலத்தின் பிற பிரச்னைகள் குறித்து பேசினோம். காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூறுவதை நாங்கள் ஏற்றுச் செயல்படுவோம். குறிப்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரின் கருத்துகளை இருவரும் ஏற்றுக் கொள்வோம். அவர்கள் எங்களை தில்லிக்கு அழைத்தால் நிச்சயமாகச் சென்று ஆலோசனை மேற்கொள்வோம். வரும் டிசம்பர் 3 அன்று இருவரும் கூட்டாகச் சந்திக்கும் விழாவில் கங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபாலைச் சந்திக்கிறோம். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. டி.கே. சிவகுமாரும் நானும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் அரசாங்கத்தை நடத்துகிறோம். எதிர்காலத்திலும், நாங்கள் ஒற்றுமையாக அரசாங்கத்தை நடத்துவோம். காங்கிரஸ் உயர்மட்ட குழு சொன்னால் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் ஆகலாம்” என்றார்.

Summary

Karnataka CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar met for a breakfast and answered press together. While, When media asked CM Siddaramaiah when Dy CM DK Shivakumar will become Chief Minister, he said "When the High Command says..."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in