நானும், சிவகுமாரும் ஒன்றாக இருக்கிறோம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தராமையா

அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அதிருப்தி தெரிவித்தனர்.
நானும், சிவகுமாரும் ஒன்றாக இருக்கிறோம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தராமையா
ANI
1 min read

துணை முதல்வர் டி.கே. சிவகுமாருடனான கருத்து வேறுபாடுகள் குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது அரசு பாறையைப்போல ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

`எங்கள் அரசு ஒரு பாறையைப்போல ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். நாங்கள் ஒன்றாக வருவோம்’ என்று துணை முதல்வர் சிவகுமாருடன் கைகோர்த்தபடி முதல்வர் சித்தராமையா கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலாவின் வருகை குறித்து மைசூரூவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தபோது, ​​கட்சி அமைப்பை வலுப்படுத்த அவர் வந்துள்ளதாகவும், அவரது பணியில் அவர் ஈடுபடுவார் என்றும் சித்தராமையா கூறியதாக வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தசரா விழாவை சித்தராமையா தொடங்கி வைக்கமாட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா கூறியது குறித்து, சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​அரசாங்கம் அப்படியேதான் இருக்கும் என்று கூறினார்.

`டி.கே. சிவகுமாரும் நானும் ஒன்றாக இருக்கிறோம், இந்த அரசாங்கம் ஒரு பாறையைப்போல ஐந்து ஆண்டுகள் அப்படியே இருக்கும். பாஜக பொய்களுக்குப் பெயர் பெற்றது; அவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம், அவர்களிடமிருந்து வரும் எந்தக் கருத்துகளை நாங்கள் பொருட்படுத்துவதில்லை’ என்றார்.

ஆளும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று (ஜூன் 30) அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தவுள்ளதாக செய்தி வெளியானது.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அதிருப்தி தெரிவித்ததால், மேலிடப் பொறுப்பாளரின் வருகையும், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு `புரட்சிகரமான’ அரசியல் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா அண்மையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆட்சித் தலைமை மாற்றப்படலாம் என்று வதந்தி பரவத் தொடங்கியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in