
கர்நாடகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி முடிப்பதற்காக தசரா விடுமுறையை மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்து அரசுப் பள்ளிகளுக்கு அக்டோபர் 18 வரை அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2015-ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற சித்தராமய்யா, புதிய கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி செப்டம்பர் 22 அன்று கர்நாடகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அக்டோபர் 7-க்குள் கணக்கெடுப்புப் பணிகள் முடிவடையும் என்றும் கூறப்பட்டது.
கர்நாடகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அதிகாரிகள் நடத்தும் இந்தக் கணக்கெடுப்பில் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று 60 கேள்விகள் கொண்ட படிவத்தை நிரப்பிக் கணக்கெடுத்து வருகிறார்கள். தசரா விடுமுறையை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் விடுமுறைகள் முடிந்து, பள்ளிகள் நாளை (அக்.8) திறக்கப்படவுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணிகள் முழுதாக முடிவடையாததால், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அரசு அறிவித்திருந்தது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, அரசு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமய்யா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் முழுதாக முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கூடுதலாக 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமய்யா, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அடுத்த 10 நாள்கள் விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி பள்ளிகள் அக்டோபர் 18-ல் திறக்கப்படவுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது:-
”கர்நாடகத்தில் செப்டம்பர் 22 முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இன்று அப்பணிகள் முடிவடைய வேண்டிய நிலையில், இன்னும் சில மாவட்டங்களில் கணக்கெடுக்க வேண்டியுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் 97%, தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பியில் 63% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
மாநிலம் முழுவதும் 1.2 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் 60,000 அரசு ஊழியர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்றைய ஆலோசனையில், ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைக்கப்படது. அதன்படி ஆசிரியர்களை இப்பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தும் வகையில், அடுத்த 8 நாள்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுகிறது.
உயர்க்கல்வித் துறையில் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில், தீபாவளிக்கு முன் கணக்கெடுப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.