கர்நாடக சட்டப்பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைகளில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள், வினாத் தாள் கசிவு என பல்வேறு குளறுபடிகள் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருந்தன.

தொடக்கம் முதலே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து வரும் தமிழ்நாடு, கடந்த மாதம் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்க சட்டமுன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தது. கல்வித் துறையில் மிகப் பெரிய ஊழல் எனக் குறிப்பிட்ட மேற்கு வங்கம், மாநில அரசால் முன்பு நடத்தப்பட்டு வந்த தனி நுழைவுத் தேர்வு முறையை முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்த இரு மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவையிலும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு கர்நாடக அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்த நிலையில், மாநிலக் கல்வித் துறை அமைச்சர் ஷரன் பிரகாஷ் பாட்டில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தார். மருத்துவப் படிப்புக்கு கர்நாடக பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை நீட் தேர்வு முறை கடுமையாகப் பாதித்துள்ளது. மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்துவதற்கான உரிமையை நீட் தேர்வு முறை பறித்துள்ளது. இது ரத்து செய்யப்பட வேண்டும்.

மேலும், நீட் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் குளறுபடிகளைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்விலிருந்து கர்நாடகத்துக்கு உடனடியாக விலக்கு அளிக்கவும், மாநில அரசு நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வழிவகை செய்யவும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-ல் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக சட்டமேலவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in