
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில், விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு ஆபத்தான முன்னுதாரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார் மாநிலங்களவையும் எம்.பி.யும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான கபில் சிபல்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ தில்லி இல்லத்தில், கடந்த 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து, அவரது இல்லத்திற்கு தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புத் துறையினர், அங்கு கட்டுக் கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, பஞ்சாப்-ஹரியாணா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோரைக் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைத்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும், எரிந்துபோன பணக்கட்டுகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களையும் பொதுவெளியில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்தரங்கில் கபில் சிபல் கூறியதாவது,
`அது சரியா தவறா என்பதைக் காலம்தான் கூறவேண்டும். ஏனென்றால், அந்த ஆவணத்தின் ஆதாரமே நீதிமன்றம்தான், அதனாலேயே பொதுமக்கள் அதை நம்ப முனைகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பது பின்னர் முடிவுசெய்யப்படும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.
வெளிப்படையாகக் கூறவேண்டுமென்றால், வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவேண்டும். நீதிபதிகளுக்குத் தெரிந்த அளவுக்கு எங்களுக்கும் தெரியும். இவற்றையெல்லாம் நீங்கள் பொதுத் தளத்தில் வெளியிட்டால், அந்த நிறுவனம் தோற்றுவிட்டது என்பது பொருள்’ என்றார்.