கன்வார் யாத்திரை தொடர்பான மாநில அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
கன்வார் யாத்திரை நடைபெறும் வழியில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் உரிமையாளர்களின் பெயர்களைக் கட்டாயமாக எழுத வேண்டும் என்று உத்தர பிரதேச, உத்தரகண்ட் அரசுகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
ஒவ்வொரு வருடமும் வட இந்தியாவில் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரையின்போது வட இந்திய மாநில மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து நடைபயணமாகச் சென்று ஹரித்துவார், சுல்தான்கஞ்ச் போன்ற இடங்களில் கங்கை நதியில் குடங்களிலும், பாலிதீன் குப்பிகளிலும் நீரை எடுப்பார்கள்.
பிறகு அவற்றைத் தோள்களில் சுமந்து வந்து தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே இருக்கும் சிவாலயங்கள் அல்லது புகழ் பெற்ற காசி, தேவ்கர், மீரட் போன்ற சிவாலயங்களில் இருக்கும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த கன்வார் யாத்திரை நிகழ்வு இன்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 6 வரை நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த யாத்திரை நடைபெறும் வழித்தடங்களில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் கடை உரிமையாளர்களின் பெயர்களைக் கட்டாயமாக எழுத வேண்டும் என்று உத்தர பிரதேச, உத்தரகண்ட் அரசுகள் உத்தரவிட்டன.
உ.பி, உத்தரகண்ட் அரசுகளின் இந்த உத்தரவுகளுக்கு, `இது தீண்டாமையை ஊக்குவிக்கும் செயல்’ என்று எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்தன. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று நடந்த வழக்கு விசாரணையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் உள்ள இந்த வழித்தடங்களில் இருப்பவை பெரும்பாலும் டீ மற்றும் பழக்கடைகள். பெயர் பலகை வைப்பதால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல் உண்டாகும் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் எந்த பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும். உணவகங்களில் என்ன வழங்குகிறார்கள் என்பதே முக்கியம், எந்த பின்னணியைச் சேர்ந்தவர்கள் வழங்குகிறார்கள் என்பதல்ல’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வீ.என். பாட்டீ மாநில அரசுகளின் உத்தரவுகளுக்குத் தடை பிறப்பித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் இரு அரசுகளையும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.