
பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது, தன்னிடம் பேரிடர் நிவாரண நிதியோ, அமைச்சரவைப் பதவியோ இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அது குறித்து இன்று (ஜூலை 7) விளக்கமளித்துள்ள கங்கனா, தனது கூற்று சர்ச்சைக்குரியவை அல்ல என்றும், வழக்கமான பாணியில் தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஜூலை 7), தனது மண்டி தொகுதியில் ஆய்வு செய்த கங்கனா, ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில்,
`என்னிடம் பேரிடர் நிவாரண நிதியோ அல்லது அமைச்சரவைப் பதவியோ இல்லை. எம்.பி.க்களின் பணி நாடாளுமன்றத்திற்கானது மட்டுமே. திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நாங்கள் மிகவும் சிறியவர்கள். ஆனால், மத்தியில் இருந்து பேரிடர் நிதியைப் பெற நான் உதவ முடியும்’ என்றார்.
கங்கனாவின் கருத்துகள் பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது,
`என் கையில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது பற்றிய யதார்த்தத்தை நான் மக்களிடம் சொன்னேன். ஒரு எம்பியாக, நமது கவலைகளை எழுப்பி நான் நிதியைக் கொண்டு வரவேண்டும். எனக்கு ஒரு நோக்கம் உள்ளது.
எங்கள் கட்சி மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று அவர்களிடம் நான் கூறினேன். எனது கருத்துகள் சர்ச்சைக்குரியவை அல்ல, அது வழக்கமாக நான் கருத்துகளை வெளிப்படுத்தும் பாணி’ என்றார்.
ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு சிறப்பு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்போவதாக பேட்டியில் குறிப்பிட்ட கங்கனா, மண்டிக்கு வருகை தருவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னை கேலி செய்ததைக் கண்டித்தார்.