
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து 5 ஆண்டுகள் ஆன பிறகு, இந்த விவகாரம் தற்போது மீண்டும் விவாதமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு 4 சுயேச்சைகள், இரு பகுஜன் சமாஜ் மற்றும் ஒரு சமாஜவாதி எம்எல்ஏ-களின் ஆதரவுடன் 15 மாதங்களுக்கு நீடித்தது.
ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்கள். மார்ச் 2020-ல் கமல் நாத் ராஜினாமா செய்தார்.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அளித்த பாட்காஸ்ட் ஒன்றால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல் நாத் இடையிலான தனிப்பட்ட மோதல்கள் காரணமாகவே ஆட்சி கவிழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
"2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் குற்றம்சாட்டப்படுவேன். உண்மை என்னவெனில், காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற நான் தொடர்ச்சியாக முயற்சித்தேன். ஆட்சி கவிழும் என எச்சரிக்கையும் செய்துள்ளேன்.
இரு தலைவர்களுடனும் நல்லுறவைக் கடைபிடித்து வரும் தொழிலதிபர் ஒருவருடைய வீட்டில் கமல் நாத், சிந்தியா மற்றும் நான் அமர்ந்து பேசினோம்.
குவாலியர்-சாம்பல் பிராந்தியம் தொடர்புடைய பிரச்னைகள் எழுப்பப்பட்டன. பிராந்தியம் தொடர்புடைய எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எங்களுடைய (திக்விஜய் சிங் - சிந்தியா) கூட்டு விருப்பத்தின்படி சரி செய்யப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. குவாலியர் - சாம்பல் பிராந்தியம் தொடர்புடைய கூட்டு விருப்பப் பட்டியலில் நான் கையெழுத்திட்டேன். சிந்தியா அடுத்த நாளே அதைச் சமர்ப்பித்தார். ஆனால், விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவே இல்லை. அவை தீர்க்கப்பட்டிருந்தால், ஒருவேளை ஆட்சி கவிழாமல் இருந்திருக்கலாம்" என்றார் திக்விஜய் சிங்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் கமல் நாத் பதிவிட்டதாவது:
"பழைய விவகாரங்களைத் தோண்டி எடுப்பதால், எந்தப் பலனும் இல்லை. தனிப்பட்ட இலக்குகளைத் தவிர, ஆட்சியை திக்விஜய் சிங் நடத்துவதாகவே ஜோதிராதித்ய சிந்தியா உணர்ந்தார் என்பது உண்மை தான். இந்த வெறுப்பில் தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பிரித்து அவர் ஆட்சியைக் கவிழ்த்தார்" என்று கமல் நாத் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் சிங் யாதவ் இதுதொடர்பாக கூறியதாவது:
"கமல் நாத் தலைமையிலான ஆட்சியில் திக்விஜய் சிங் தான் நடத்தி வந்துள்ளார் என்பதை, கமல் நாத் ஒப்புக்கொண்டுவிட்டார். திக்விஜய் சிங் முதலில் மாநிலத்தைச் சீரழித்தார். அடுத்து காங்கிரஸை சீரழித்தார். இறுதியாக கமல் நாத்தின் அரசியல் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Madhya Pradesh | Madhya Pradesh Congress | Kamal Nath | Jyotiraditya Scindia | Digvijaya Singh