தமிழ் மொழியிலிருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் தெரிவித்ததற்கு கர்நாடகத்தில் கட்சி வேறுபாடின்றி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட நட்சத்திரம் ஷிவ ராஜ்குமார் கலந்துகொண்டார். இசை வெளியீட்டு விழாவில் நீண்ட உரையாற்றி படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களைத் தனித்தனியாக நினைவுகூர்ந்து பாராட்டி பேசினார். இதன் பகுதியாக ஷிவ ராஜ்குமாரையும் பாராட்டி பேசினார் கமல்ஹாசன். அப்போது "தமிழிலிருந்து பிறந்தது தான் உங்கள் மொழி" என கன்னடத்தைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகத்திலிருந்து கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. கட்சி வேறுபாடின்றி கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
கர்நாடக ரக்ஷனா வேடிக்கே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமல்ஹாசனுக்கு விடுத்த எச்சரிக்கையில், "உங்களுக்கு நாங்கள் கடும் எச்சரிக்கை விடுக்கிறோம். கர்நாடகத்தில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும். உங்களுடைய படங்களைத் திரையிட வேண்டும். கன்னடர்களையும் கன்னட மொழியையும் இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.
பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவர் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
"அனைத்து மொழிகளையும் மதிக்கும் பண்பைக் கலைஞர்கள் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் பணிபுரிந்துள்ள கமல்ஹாசன், தற்போது கன்னட மொழியை இழிவுபடுத்தியுள்ளது வியப்பளிக்கிறது. இது அவருடைய ஆணவத்தின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.
தென்னிந்தியாவில் இணக்கத்தைக் கொண்டு வர வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஹிந்து மதத்தையும் மத உணர்வுகளையும் புண்படுத்தி வருகிறார். தற்போது 6.5 கோடி கன்னட மக்களின் சுயமரியாதையைப் புண்படுத்தி கன்னட மொழியை இழிவுபடுத்தியுள்ளார். கன்னட மக்களிடம் கமல்ஹாசன் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்க வேண்டும்.
கன்னட மொழி 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்திய வரைபடத்தில் செழிப்பையும் இணக்கத்தையும் கொண்டு வருகிறது. கன்னட மக்கள் மொழி வெறுப்பாளர்கள் அல்ல என்பதை கமல்ஹாசனுக்கு நினைவுபடுத்துகிறேன். அதேசமயம், தங்களுடைய நிலம் மொழி, மக்கள், தண்ணீர் மற்றும் சிந்தனை என்று வந்துவிட்டால், தங்களுடைய சுயமரியாதையை ஒருபோதும் தியாகம் செய்ய மாட்டார்கள்" என்று விஜயேந்திர எடியூரப்பா பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் கருத்து குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. பாவம், கமல்ஹாசனுக்கு அதுபற்றி தெரியவில்லை" என்றார்.