
பாரத ராஷ்ட்ரிதி சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து கட்சித் தலைவரின் மகளும் சட்டமேலவை உறுப்பினருமான கவிதா விலகியுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மீது விமர்சனங்களை வைத்த கவிதா, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக செவ்வாயன்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஹைதராபாதில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"தெலங்கானா மக்களின் நலனுக்கு எதிராக நான் எப்போதும் செயல்பட்டதில்லை. சிலர் தங்களுடைய சுயநலத்துக்காக கட்சியில் முன்னணி பொறுப்பைப் பெற்று என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்து என்னைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளார்கள்.
தங்களைச் சுற்றியுள்ள தலைவர்களின் உண்மையான நோக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என என் தந்தைக்குக் கோரிக்கை வைக்கிறேன். பிஆர்எஸ் குடும்பத்தை அவர்கள் உடைத்துவிட்டார்கள். சுய லாபத்துக்காகவே அவர்கள் இதைச் செய்துள்ளார்கள்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துரோகிகளுடன் இணைந்து பிஆர்எஸ் குடும்பத்தை உடைத்ததை தெலங்கானா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
கே. சந்திரசேகர ராவ் மற்றும் கேடி ராமா ராவ் என் குடும்பத்தினர். கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது, பதவிகளை இழப்பது போன்ற எக்காரணத்துக்காகவும் எங்களுடைய ரத்த பந்தம் முறிந்துவிடக் கூடாது. ஆனால், சிலர் தங்களுடைய சொந்த லாபம் மற்றும் அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் பிரிய வேண்டும் என நினைக்கிறார்கள்" என்றார் கவிதா.
தனது சகோதரர் கேடி ராமா ராவ் குறித்து பேசுகையில், "அவரிடம் (கேடி ராமா ராவ்) எனக்கு எதிரான சதித் திட்டங்கள் மற்றும் பொய்ப் பிரசாரங்கள் குறித்து கூறினேன். சகோதரியாக அல்லாமல் கட்சியின் சட்டமேலவை உறுப்பினராகக் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. என்னை அழைக்கக் கூட இல்லை. இது நீண்ட நாள்களுக்கு முன்பு நடந்தது. கட்சியின் செயல் தலைவராக சதித் திட்டங்கள் குறித்த என் புகார்கள் குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா? ஒரு வார்த்தையாவது அதுபற்றி பேசினீர்களா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
கட்சியில் முக்கியத் தலைவராக இருக்கும் தனது உறவினரான டி ஹரிஷ் ராவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கவிதா அடுக்கியதே இடைநீக்கத்துக்கான காரணம். "காலேஷ்வரம் திட்டம் தொடங்கியபோது, ஹரிஷ் ராவ் தான் நீர்ப்பாசனத் துறை அமைச்சர். அவருக்கு எதிராக ரேவந்த் ரெட்டி எதுவுமே பேசவில்லை" என்றார் கவிதா. எல்லா பிஆர்எஸ் தலைவர்கள் மீதும் ரேவந்த் ரெட்டி வழக்குத் தொடுத்தார். ஹரிஷ் ராவை மட்டும் விட்டுவிட்டார் என்றும் கவிதா குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
K Kavitha | Bharat Rashtra Samithi | BRS | Telangana | Telangana CM | Revanth Reddy | K. Chandrashekar Rao | K Chandrashekar Rao | KCR | T Harish Rao | KTR | KT Rama Rao