
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்ச நீதிமன்றம் அமைத்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு இன்று விசாரணை மேற்கொண்டது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் ஏராளமான பணம் இருந்ததைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கையைக் கேட்டுப் பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூவர் அடங்கிய குழுவை அமைத்தார்.
உச்ச நீதிமன்றம் அமைத்த இந்தக் குழுவானது, தில்லியிலுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டுக்குச் சென்று இன்று விசாரணை மேற்கொண்டார்கள்.
இதனிடையே, அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொலீஜியம் இந்தப் பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்தது. கடந்த மார்ச் 20 அன்று தெளிவுபடுத்திய கொலீஜியம், தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கியுள்ள துறை ரீதியான விசாரணைக்கும் இந்த முடிவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியது.
எனினும், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பணியிட மாற்றத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதை எதிர்த்து காலவரையற்ற போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்கள்.
போராட்டத்தை வழிநடத்தும் அலஹாபாத் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அனில் திவாரி கூறுகையில், "இந்தப் போராட்டம் எந்தவொரு நீதிமன்றத்துக்கோ அல்லது நீதிபதிக்கோ எதிரானது அல்ல. நீதித் துறைக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு எதிரானது தான் இந்தப் போராட்டம். எங்களுடையப் போராட்டம் என்பது ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரானது. வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்புக்கு எதிரானது. எங்களுடையத் தற்போதைய கோரிக்கை என்பது பணியிட மாற்றம் உத்தரவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்" என்றார் அவர்.