
அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று (ஆக. 12) அறிவித்துள்ளார்.
நடப்பாண்டின் தொடங்கத்தில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து எரிந்த நிலையில் பெருமளவு பணம் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஓம் பிர்லா மக்களவையில் பேசியதாவது,
`ஜூலை 21, 2025 தேதியிட்ட தீர்மானத்திற்கான நோட்டீஸை நான் பெற்றுள்ளேன், அதில் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அவையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட மொத்தம் 146 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்,
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 217 மற்றும் 218 உடன் படிக்கப்பட்ட 1968 நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக இந்திய குடியரசுத் தலைவரிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க இது வழிவகை செய்கிறது’ என்றார்.
தீர்மானத்தைப் படித்த சபாநாயகர், `அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பின்வரும் தவறான நடத்தைக்காக அவரது பதவியில் இருந்து நீக்கக்கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க இந்த அவை தீர்மானிக்கிறது’ என்று கூறினார்.
குறிப்பாக, புது தில்லியில் 30, துக்ளக் கிரசென்ட்டில் உள்ள நீதிபதி வர்மாவின் இல்லத்தில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையை தீர்மானம் குறிப்பிட்டது. அப்போதைய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய உள் விசாரணைக் குழுவின் அறிக்கையையும் தீர்மானம் குறிப்பிட்டது.
நீதிபதி யஷ்வந்த வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார்; சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா; மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோரைக்கொண்ட குழுவை அமைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மேலும், இந்த குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் சபாநாயகர் கூறினார்.