
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக `வலுவான ஆதாரங்கள்’ உள்ளதாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்று நீதிபதிகளைக்கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை யஷ்வந்த வர்மா அணுகியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தனிநபர் மற்றும் அரசியலமைப்பு பதவியை வகிப்பவர் என்ற வகையில் தனது உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் யஷ்வந்த வர்மா குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தன்னை பதவி நீக்கம் செய்ய முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த பரிந்துரையை ரத்து செய்யுமாறும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கியமான உண்மைகளை ஆராயாமல் விசாரணை நடவடிக்கைகளை விசாரணைக் குழு முடித்ததாகவும், ஆதாரத்தின் மீதான பொறுப்பு தன் மீது தவறுதலாக சுமத்தப்பட்டுள்ளதால் உண்மை என விசாரணைக் குழு கருதியவற்றை பொய்யென்று நிரூபிக்கவேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி வர்மா வாதிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது யஷ்வந்த் வர்மாவிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ளது.
மேலும், நீதிபதி வர்மாவின் அரசு இல்லத்திலிருந்து கணக்கில் வராத ஏராளமான பணம் மீட்கப்பட்டது குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விசாரணை நடத்த தில்லி காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்ட சில நாட்களில் இத்தகைய மனுவை யஷ்வந்த வர்மா தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மார்ச் 2025-ல், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, எரிந்த அல்லது பகுதியளவு எரிந்த பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டது.