

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் உள்ளார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 23 அன்று நிறைவடைகிறது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூர்யகாந்தின் பெயரை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24 அன்று குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்கும் இவர், பிப்ரவரி 9 2027 வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1962-ல் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் பிறந்த நீதிபதி சூர்யகாந்த், ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர், 1985-ல் சண்டிகருக்கு குடிபெயர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
கடந்த 2000-ல் அவர் ஹரியானா மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே மூத்த வழக்கறிஞராகவும் பதவி உயர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து 2004-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். சுமார் 14 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 2018-ல் ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2019-ல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி சூர்யகாந்த் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல அமர்வுகளில் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மாவின் வழக்கை விசாரித்த அமர்வில் இருந்தபோது, நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர் கூறிய கருத்து பல விவாதங்களைக் கிளப்பியது.
இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 15 மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
President Droupadi Murmu has appointed Suryakant Sharma as the next Chief Justice of the Supreme Court.