படம்: https://x.com/narendramodi
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார் சூர்ய காந்த்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சூர்ய காந்த்! | Justice Surya Kant |

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்கள்.
Published on

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்கள்.

ஹரியாணா மாநிலம் ஹிசாரில் பிப்ரவரி 10, 1962-ல் பிறந்தார் சூர்ய காந்த். 1984-ல் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்கிய அவர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொடர வேண்டும் என்பதற்காக 1985-ல் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தார்.

ஜூலை 7, 2000-ல் ஹரியாணாவின் இளம் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2001-ல் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார் சூர்ய காந்த்.

ஜனவரி 9, 2004-ல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2018 அக்டோபரில் ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பிப்ரவரி 24, 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக் காலம் நவம்பர் 23 அன்று நிறைவடைந்தது. இவரைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பிப்ரவரி 9, 2027 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் தொடரவுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பி.ஆர். கவாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு என்று ஒதுக்கப்பட்ட பிரத்யேகமான காரில் வந்தார். தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்ற பிறகு, கவாய் வந்த காரில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மாற்று வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார் பி.ஆர். கவாய்.

Summary

Justice Surya Kant was sworn in by President Droupadi Murmu as the 53rd Chief Justice of India at the Rashtrapati Bhavan on Monday, November 24, 2025.

CJI Surya Kant | Chief Justice of India | Chief Justice of India Surya Kant | Surya Kant | Supreme Court | Rashtrapati Bhavan | BR Gavai |

logo
Kizhakku News
kizhakkunews.in