
அரசிடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதுதான், நீதிமன்ற சுதந்திரம். ஆனால் அரசுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவது மட்டுமே நீதிமன்ற சுதந்திரம் இல்லை எனப் பேசியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
வரும் நவம்பர் 10-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் டி.ஒய். சந்திரசூட். இந்நிலையில் நேற்று (நவ.4) தில்லியில் நடந்த ஒரு நிகழ்வில், நீதிமன்ற சுதந்திரம் குறித்து சந்திரசூட் பேசியவை பின்வருமாறு
`தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்புக்குப் பிறகு நீங்கள் சுதந்திரமாக செயல்படுகிறீர்கள் என நீதிமன்றத்தை பாராட்டியவர்கள் பிற வழக்குகளின் தீர்ப்புகளைக் கண்டு விமர்சிக்கின்றனர். அரசுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவது மட்டுமே நீதிமன்ற சுதந்திரம் கிடையாது.
நீதிமன்ற சுதந்திரம் என்பது இப்போதும் அரசிடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதுதான். ஆனால் அது மட்டுமே நீதிமன்ற சுதந்திரம் இல்லை. நமது சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக தற்போதைய சமூக வலைதள காலத்தில், ஆன்லைன் மீடியாவை பயன்படுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்களிடம் இருந்து நீதிமன்றங்களுக்கு அழுத்தங்கள் வருகின்றன.
அரசுக்கு எதிரான தீர்ப்புகள் வழங்க வேண்டிய வழக்குகளில், நாங்கள் அரசுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகிறோம். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்க வேண்டிய அவசியம் இருந்தால், சட்டத்தின் அடிப்படையிலேயே நாங்கள் தீர்மானிப்போம். நிலையான மற்றும் துடிப்பான நீதித்துறையின் இருப்புக்கு முக்கியமானதாக இருக்கும் அந்த செய்தி முழுவதுமாக சென்று சேர வேண்டும்’ என்றார்.
கடந்த பிப்ரவரி 15-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் தேர்தல் நிதிப்பத்திரம் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது.