
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தார் கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால்.
கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை வழங்க பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிக்க 38 முறை கூட்டுக்குழு கூடியது.
இந்நிலையில், மசோதாவில் இடம்பெறவுள்ள 14 திருத்தங்களுக்கு கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேநேரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனை அடுத்து கூட்டுக்குழு அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
650-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அதிருப்தி கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இன்று (ஜன.30) கூட்டுக்குழு அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கினார்கள்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை, அடுத்ததாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி, கூட்டத்தொடரின் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.