இண்டியா கூட்டணியில் குழப்பம்: காஷ்மீரில் பிடிபி தனித்துப் போட்டி!

நாங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம். கதவை அவர் அடைத்தால், அது எங்களுடைய தவறு கிடையாது - ஒமர் அப்துல்லா
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று இடங்களில் போட்டியிடுவதாக ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முஃப்தி கூறியதாவது:

"ஃபரூக் அப்துல்லாதான் எங்களுடைய சிறந்த பிரதிநிதி என்பதால், தொகுதிப் பங்கீடு குறித்து அவர் முடிவு செய்வார் என்று மும்பையில் இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், காஷ்மீரில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தனிச்சையாக முடிவு செய்துள்ளது.

ஒமர் அப்துல்லா பேசிய விதம் ஏமாற்றமளிக்கிறது. அவர் பேசியது எனக்கு மட்டுமல்ல, எனது கட்சியினரையும் பாதித்துள்ளது. அப்படி இருக்கும்போது, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தொண்டர்களிடம் எப்படி என்னால் சொல்ல முடியும்?. நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும். நாடாளுமன்றத்தில் யாருடைய குரல் ஒலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அவர்கள்தான் சிறந்த எஜமானர்கள்" என்றார் அவர்.

மெஹபூபா முஃப்தியின் அறிவிப்பு குறித்து ஒமர் அப்துல்லா கூறுகையில், "காஷ்மீரில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதாக மெஹபூபா முஃப்தி அறிவித்தால், அது அவருடைய விருப்பம். நாங்கள் எங்களுடைய வியூகத்தின் அடிப்படையில் 3 இடங்களில் நிற்பதாக முடிவு செய்துள்ளோம். தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அவர் முடிவு செய்துவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்குக் கூட அவருக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. நாங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம். கதவை அவர் அடைத்தால், அது எங்களுடைய தவறு கிடையாது" என்றார் ஒமர் அப்துல்லா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in