
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெறவுள்ள 14 திருத்தங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மக்களவையில் கடந்த ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெறவுள்ள 14 திருத்தங்களுக்கு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பாஜக கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.பி.க்களின் ஆதரவுடன் அவை நிறைவேறின.
இது தொடர்பாக கூட்டுக்குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான ஜெகதாம்பிகா பால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியதாவது,
`44 சட்டத்திருத்தங்களை பிரிவு வாரியாக விவாதித்தோம். 6 மாதங்களாக நடைபெற்ற விரிவான விவாதங்களுக்குப் பிரிவு, அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் திருத்தங்களைக் கோரினோம். இது எங்களின் கடைசி அமர்வு. பெரும்பான்மையின் அடிப்படையில் 14 சட்டத்திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கியது
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் திருத்தங்களை முன்மொழிந்தார்கள். அந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அவற்றுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் இருந்தன’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏஎன்ஐக்கு பேட்டியளித்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி,
`இன்று அவர்கள் என்ன செய்யவேண்டும் என திட்டமிட்டார்களோ, அதை செய்துவிட்டனர். எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. ஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றை நாங்கள் கேட்டோம். ஆனால் எதுவுமே எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஜெகதாம்பிகா பால் ஜனநாயகத்தை அழித்துவிட்டார்’ என்றார்.
1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ல் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெறவேண்டிய திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்க, ஆக.13-ல் பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது