ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 21 மக்களவை எம்.பி.க்களும், 10 மாநிலங்களவை எம்.பி.க்களும் இடம்பெறுவது பொதுவாக பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள்: நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!
ANI
1 min read

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாக்கள் மீது ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை வழங்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் தொடர்பான 129வது அரசியல் திருத்த சட்ட மசோதாவையும், யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள் தொடர்பான மற்றொரு சட்ட மசோதாவையும் கடந்த டிச.17-ல் மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுத்தார். விவாதத்தின் இறுதியில் பதிலுரை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் என அறிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 21 மக்களவை எம்.பி.க்களும், 10 மாநிலங்களவை எம்.பி.க்களும் இடம்பெறுவது பொதுவாக பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களுக்கான கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, இதில் இடம்பெறும் 21 மக்களவை எம்.பி.க்கள் பட்டியல் நேற்று வெளியானது.

இதன்படி, பாஜகவைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ், சி.எம். ரமேஷ், சம்பித் பத்ரா, காங்கிரஸைச் சேர்ந்த பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, திமுகவைச் சேர்ந்த செல்வகணபதி, திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி, சமாஜ்வாதியைச் சேர்ந்த தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த சுப்ரியா சுலே, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் பாலயோகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டுக்குழுவில் இடம்பெறும் 10 மாநிலங்களவை எம்.பி.க்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் திங்கட்கிழமையில் மசோதாக்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க கூட்டுக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in